×

மாவட்டத்திற்கு தேவைப்படும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு

ஊட்டி : நாடாளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கும் தேவைப்படும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து தொகுதி வாரியாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது.

இத்தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுபாளையம்,பவானிசாகர் மற்றும் அவினாசி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி (தனி) தொகுதியில் தேர்தலை சுமூகமாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊட்டியில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கடந்த மாதம் 21ம் தேதி முதற்கட்ட சுழற்சி முறையில் ஊட்டி,குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன்படி ஊட்டி தொகுதியில் உள்ள 239 வாக்கு சாவடிகளுக்கு தலா 286 மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (20 சதவீதம் கூடுதல்),310 விவிபேட்., இயந்திரங்கள் (30 சதவீதம் கூடுதல்) ஒதுக்கப்பட்டது.

கூடலூர் தொகுதியில் உள்ள 224 வாக்கு சாவடிகளுக்கு 268 வாக்குபதிவு இயந்திரம்,கட்டுபாட்டு இயந்திரம், 291 விவிபேட்., இயந்திரம், குன்னூர் தொகுதியில் உள்ள 226 வாக்குச்சாவடிகளுக்கு 271 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 293 விவிபேட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 689 வாக்குச்சாடிகளுக்கு 825 மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுபாட்டு இயந்திரங்கள், 894 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊட்டி தொகுதிக்கான இயந்திரங்கள் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியிலும்,கூடலூர் தொகுதிக்கு புனித தாமஸ் பள்ளியிலும், குன்னூர் தொகுதிக்கு பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரியிலும் உள்ள பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.சிசிடிவி., கேமரா, வெப் கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி திமுக., வேட்பாளர் ஆ.ராசா, பாஜக.,வேட்பாளர் எல்.முருகன், அதிமுக., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன்,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் மற்றும் சுயேட்சைகள் உட்பட 16 பேர் போட்டியிடுகின்றனர்.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயரை மட்டுமே பதிவு செய்ய முடியும். தற்போது நீலகிரி தொகுதியில் 16 பேர் போட்டியிடும் நிலையில் நோட்டாவை சேர்த்து 17 பட்டன்கள் அமைக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் கூடுதலாக ஒரு வாக்குபதிவு இயந்திரம் அனுப்பப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து கூடுதலாக தேவைப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து எடுத்து வரப்பட்டது. இவற்றை ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. கடந்த 6ம் தேதியன்று பெல் நிறுவன பொறியாளர்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே இருப்பில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் பெருந்துறையில் இருந்து கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் என மொத்தம் 825 இயந்திரங்கள் சுழற்சி முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அருணா தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 3 தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு கிடங்கு திறக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஆர்டிஒ.,க்கள் மகராஜ், சதீஷ், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பு அலுவலர் தமிழ்மணி, தேர்தல் சீனிவாசன்,அனைத்து வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்திற்கு தேவைப்படும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Parliamentary General Election-2024 ,Nilgiris ,Tamil Nadu ,Puducherry… ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை மலை காய்கறி விவசாயம் பாதிப்பு